சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய 4 நிறுவனங்களுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திய 4 நிறுவனங்களுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து உள்ளது.
மும்பை,
மும்பை முல்லுண்டு மேற்கு ஆஷா நகரில் நந்தவன் தொழிற்பேட்டை பகுதி உள்ளது. இங்குள்ள சில நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் கழிவுகளை வெளியேற்றுவதாக புகார்கள் வந்தன.
இந்த புகார்கள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விளக்கம் கேட்டு இருந்தது.
இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நந்தவன் தொழிற்பேட்டையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரிலையன்ஸ் பேக்கேஜிங், சீ மெரைன் சப்ளை கம்பெனி, மாஸ்டர் என்ஜினீயரிங், ரவிராஜ் இன்டஸ்டிரி ஆகிய நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்களுக்கு மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அபராதம் விதித்து உள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், 4 நிறுவனங்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.12 லட்சத்துக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்றார்.