சாத்தூரில் ரெயில்முன் பாய்ந்து நர்சு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை

ரெயில் முன்பு பாய்ந்து நர்சு ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் இந்த துயர முடிவை தேடிக்கொள்ள என்ன காரணம்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-08-17 23:30 GMT
சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்ன ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகையா. டிரைவர். இவருக்கு 2 மகள்கள். ஒரு மகனும் உள்ளார். இதில் 2-வது மகள் முனீசுவரி (வயது 23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

நேற்று காலையில் அவர் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் வேலைக்கு செல்லவில்லை. அங்குள்ள தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்டார். தலையில் பலத்த காயத்துடன் அவரது உடல் தூக்கி வீசப்பட்டு கிடந்தது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது முனீசுவரியின் உடல் அருகே சேதமின்றி கிடந்த அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவர் வேலை பார்க்கும் மருத்துவமனையில் இருந்து மற்றொரு நர்சு பேசியுள்ளார். அந்த போனை போலீசார் எடுத்து பேசினர். அப்போதுதான், தற்கொலை செய்து கொண்டது முனீசுவரி என்பது தெரியவந்தது.

முனீசுவரி உடல் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாலுகா போலீசார் இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். முனீசுவரி இந்த துயர முடிவை தேடிக்கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்