அனைத்து அரசுத்துறை அலுவலகங்களின் தலைமையிடம் தென்காசியில் அமைய வேண்டும் - கருத்துகேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
அனைத்து அரசுத்துறை அலுவலகங்களின் தலைமையிடம் தென்காசியில் அமைய வேண்டும் என்று கருத்துகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.;
தென்காசி,
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 18-ந் தேதி சட்டசபையில் நெல்லை மாவட்டம் பெரிய மாவட்டமாக இருப்பதால், தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதுகுறித்த கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்றும், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சென்னை கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் தலைமையில் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி வளாகத்தில் இதற்கான கருத்துகேட்பு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தென்காசி தனி மாவட்டம் தனி அதிகாரி அருண் சுந்தர் தயாளன், நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், திட்ட அலுவலர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு கோகுலகிருஷ்ணன் உள்பட தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், வீ.கே.புதூர், ஊத்துமலை, அம்பை உள்பட பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வக்கீல்கள், வர்த்தகர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்களில் சிலர் பேசியதாவது:-
எஸ்.எம்.கமால் முகைதீன் (தொழிலதிபர்): தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைவதை வரவேற்கிறேன். இதற்கான மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் தென்காசி புதிய பஸ்நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் தென்காசி அருகே அமைக்க வேண்டும்.
கார்த்திக் குமார் (அரசு வக்கீல்):-
தென்காசியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைய வேண்டும். அரசுத்துறை அலுவலகங்கள் அனைத்தும் தலைமையிடமான தென்காசியிலேயே அமையவேண்டும். சங்கரன்கோவிலில் ஒரு சில பகுதிகளை தென்காசி பகுதியில் சேர்த்துவிட்டு மற்ற கிராமங்களை நெல்லையிலேயே சேர்க்கலாம்.
குமார் பாண்டியன் (அ.தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளர்):- தென்காசியை தலைமையிடமாக கொண்ட அரசு அலுவலகங்களை ஆயிரப்பேரியில் அரசுக்கு சொந்தமான உள்ள இடத்தில் அமைக்க வேண்டும்.
டாக்டர் அப்துல் அஜீஸ்:- நெல்லைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வந்துள்ள நகரம் தென்காசி. எனவே இங்கு தான் தலைமையிடம் அமைய வேண்டும். அவ்வாறு அமையும் போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இங்கு வரும். இதனால் ஏராளமான மக்கள் பயனடைவார்கள்.
டேனி அருள் சிங் (விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்):- சங்கரன்கோவில் பகுதியை தென்காசியில் சேர்க்காமல் நெல்லையிலேயே சேர்க்குமாறு பொதுமக்கள் கூறுகிறார்கள். அதனை அவ்வாறு செய்யலாம்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் ஷில்பா பேசுகையில், “பொதுமக்களின் கருத்துகளை தனி அதிகாரி மற்றும் ஆணையாளர் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். உங்களது எல்லா கோரிக்கையும் விடுபடாமல் கொண்டு செல்லப்படும்“ என்றார்.
ஆணையாளர் சத்யகோபால் கூறுகையில், பொதுமக்களின் ஆலோசனைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த கருத்துகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.