சிங்கப்பெருமாள் கோவிலில் சாலையில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி - வடிகால் வசதி அமைக்க கோரிக்கை

சிங்கப்பெருமாள்கோவிலில் சாலையில் தேங்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2019-08-17 22:45 GMT
செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். மகேந்திரா சிட்டி, ஒரகடம், மறைமலைநகர் சிப்காட் ஆகிய பகுதிகள் இந்த நகரை சுற்றியுள்ளன. பெரிய நகரத்திற்கு இணையாக உள்ள சிங்கப்பெருமாள்கோவிலில் போதிய மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் ஒவ்வொரு முறையும் லேசாக பெய்யும் மழைக்கே ஒட்டுமொத்த நீரும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி குளம் போல காட்சி அளிக்கின்றன.

ஒவ்வொரு முறையும் பருவமழை காலங்களில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள் என பலரும் படையெடுத்து வந்து பார்வையிட்டு, போர்க்கால அடிப்படையில் வேலை பார்க்க உத்தரவிட்டும் இதுவரை எந்த பலனும் இல்லை.

இந்தநிலையில் நேற்று திடீரென பெய்த மழை காரணமாக நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

கடந்த மழைக்காலத்தின்போது விஞ்சியம்பாக்கம் ஏரி தூர்வாரப்பட்டு கரைகளை பலப்படுத்தினார்கள். ஆனால் கடந்த வர்தா புயலின்போது வேரோடு விழுந்த பனை மரங்களை இதுவரை அப்புறப்படுத்தவில்லை. மேலும் மழைநீர் சாலையில் வரும்போது தான் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் ஆட்களை வைத்து தூர்வாருகின்றனர்.

மழை நின்றவுடன் இதனை கண்டுகொள்வதில்லை. எனவே வடிகால் வசதி செய்து கொடுத்து மழைநீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்