கனமழையால் 2 வாரங்களாக முடங்கிய மும்பை-புனே ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது

மும்பை- புனே இடையே கனமழையால் 2 வாரங்களாக முடங்கி இருந்த ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.

Update: 2019-08-17 00:20 GMT
மும்பை,

மும்பை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதில், ராய்காட் மற்றும் புனேயில் பெய்த பலத்த மழை காரணமாக கர்ஜத்- லோனவாலா இடையே ஒரு சில இடங்களில் தண்டவாளத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் மும்பை- புனே இடையே ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மேலும் அந்த வழியாக செல்ல இருந்த பல ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சில ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தமிழர்கள் பலர் சொந்த ஊர்களில் நடந்த ஆடி மாத கோவில் திருவிழாக்களில் கலந்துகொள்ள முடியாமல் போனது.

இந்தநிலையில் கர்ஜத்- லோனவாலா இடையே தண்டவாளங்கள் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தது. இந்த பணியில் சுமார் 200 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சீரமைப்பு பணிகள் முடிந்து மீண்டும் மும்பை-புனே இடையே ரெயில் சேவை நேற்று தொடங்கியது.

நேற்று மட்டும் சுமார் 18 ரெயில்கள் அந்த வழியாக இயக்கப்பட்டன. 2 வாரங்களுக்கு பிறகு மும்பை- புனே இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது, பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்