கடலூர் சிப்காட்டில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
கடலூர் சிப்காட்டில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் முதுநகர்,
கடலூர் சிப்காட்டில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 2 தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து அந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே மற்றொரு தொழிற்சாலையில் ஊதிய உயர்வு, தொழிலாளர் நலன் குறித்து பேச்சுவார்த்தைக்கு வராததை கண்டித்தும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி 2 தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், தொழிற்சாலை அருகே போராட்டம் நடத்த அனுமதி கேட்டு கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். அப்போது தொழிலாளர்களுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், முன்னாள் கவுன்சிலர் செந்தில், ஒன்றிய செயலாளர் ரிச்செட் தேவநாதன் மற்றும் கட்சியினரும் உடன் சென்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொழிற்சாலை அருகில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை.
எனவே தொழிலாளர்கள் அனைவரும், தொழிற்சாலையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். தொழிற்சாலைகள் முன்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.