ஓமலூர் அருகே, குண்டர் சட்டத்தில் போலி டாக்டர் கைது
ஓமலூர் அருகே, குண்டர் சட்டத்தில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.;
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி சந்தைப்பேட்டை கரம்புக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). இவர் ஆங்கில மருத்துவம் படிக்காமல் சந்தைப்பேட்டையில் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதையடுத்து போலி டாக்டரான இவர் ஏற்கனவே 3 முறை கைது செய்யப்பட்டு, இது தொடர்பான வழக்கு ஓமலூர் கோர்ட்டில் நடைபெற்று கடந்த 19.9.2017 அன்று இவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் இவர் மேல் முறையீடு செய்து ஜாமீனில் வந்திருந்தார். ஆனாலும் இவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து சென்னை சிறப்பு மருத்துவ கண்காணிப்பு குழுவினர் கடந்த 23.7.19-ந் தேதி இவரை கைது செய்து, தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் போலி டாக்டரான இவர் பலமுறை கைது செய்யப்பட்டும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததால் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று முருகேசனை, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் ராமன் உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகல் சேலம் சிறையில் உள்ள முருகேசனிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.