மல்லூர் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து தர்ணா போராட்டம்
டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மல்லூர் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளை அடைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பனமரத்துப்பட்டி, ஆக.17-
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தவர் ராஜா. கடந்த 14-ந் தேதி இரவு மர்ம நபர்கள் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ராஜாவை குத்திக்கொலை செய்துவிட்டு அங்கிருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் டாஸ்மாக் குடோன் முன்பு அனைத்து டாஸ்மாக் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளை அடைத்து விட்டு வந்து, போராட்டத்தில் பங்கேற்றனர். இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் ஜம்பு தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்புச் செயலாளர் மாணிக்கம், கம்யூனிஸ்டு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், பா.ம.க. தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொலை செய்யப்பட்ட ராஜாவின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், ராஜாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ராஜாவை கொலை செய்த மர்ம நபர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பினார்கள்.இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் மதியம் 12 மணிக்கு திறக்கப்பட வேண்டிய டாஸ்மாக் மதுக் கடைகள் மாலை 3 மணிக்கு மேல் திறக்கப்பட்டன.
இது குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறும் போது, குருபரப்பள்ளியில் டாஸ்மாக் ஊழியரை கொன்று பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கண்டனத்துக்குரியது. எனவே டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை இரவு 8 மணிக்கு மூட உத்தரவிட வேண்டும், அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், டாஸ்மாக் கடைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்கள்.