கரூரில், நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் அடித்துக்கொலை - மாயமானதாக நாடகமாடிய கணவர் கைது

கரூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை அடித்துக்கொன்றுவிட்டு, மாயமானதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-16 23:00 GMT
கரூர்,

கரூர் தாந்தோன்றிமலை பூங்கா நகரை சேர்ந்தவர் சிவசங்கரன்(வயது 47). இவர் தனது வீட்டிலேயே டெக்ஸ்டைல் தொழிலுக்கு துணி வடிவமைத்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சூர்யகுமாரி (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த மாதம் 8-ந்தேதி முதல் தனது மனைவியை காணவில்லை என்று தாந்தோன்றிமலை போலீஸ் நிலையத்தில், சிவசங்கரன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு டோல்பிளாசா அருகில் சாக்கு மூட்டையில் எரிந்த நிலையில் ஒரு பெண் பிணம் கிடந்தது தெரியவந்தது. இது குறித்து அம்மைநாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பெண்ணின் உடலில் இருந்த அணிகலன்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரித்தபோது அவர், சிவசங்கரனின் மனைவி சூர்யகுமாரி என்பது தெரியவந்தது. அம்மைநாயக்கனூர் போலீசார் இது தொடர்பான வழக்கு விவரங்களை தாந்தோன்றிமலை போலீசில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் அறிவுறுத்தலின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சூர்யகுமாரியின் சாவுக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சூர்யகுமாரியின் கணவர் சிவசங்கரனிடம் விசாரித்தபோது, அவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வீட்டில் வைத்து அடித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி, யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக திண்டுக்கல்லில் வீசி விட்டு வந்ததாகவும், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இது பற்றி தெரியக்கூடாது என்பதற்காக தாந்தோன்றிமலை போலீசில் அவரை காணவில்லை என்று புகார் கொடுத்ததாகவும் தெரிவித்ததாக போலீசார் கூறினர். இதையடுத்து அந்த வழக்கை, கொலை வழக்காக தாந்தோன்றிமலை போலீசார் மாற்றம் செய்து, சிவசங்கரனை கைது செய்து கரூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்ணை அடித்துக்கொன்று மாயமானதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்