தமிழகத்தில் 45 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள் இந்த கல்வி ஆண்டு முதல் தொடக்கம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

தமிழகத்தில் 45 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள் இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Update: 2019-08-16 22:45 GMT
பாலக்கோடு,

பாலக்கோடு பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 2 நகர பஸ்கள் மற்றும் ஒரு புறநகர் பஸ் வழித்தடங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடங்களில் பஸ்கள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புதிய வழித்தடங்களில் 3 பஸ்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது:-

தமிழகத்தில் 45 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 81 புதிய பாடப்பிரிவுகள் இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கல்லூரிகளில் விண்ணப்பித்தவர்கள் இந்த புதிய பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடப்பிரிவுகளுக்கு புதிதாக விண்ணப்பங்கள் அளித்தும் மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம். இளநிலை படிப்பில் 69 பாடப்பிரிவுகளும், முதுநிலை படிப்பில் 12 பாடப்பிரிவுகளும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடப்பிரிவுகளை மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் பயன்படுத்தி உயர்கல்வி பெறவேண்டும்.

பாலக்கோடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் தற்போது 7 பாடப்பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பங்கள் வழங்கியவர்கள் இந்த பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். இல்லை எனில் புதிதாக விண்ணப்பம் செய்யலாம். தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் முழுமையாக இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். காரிமங்கலம் பெண்கள் அரசு கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக ஒரு பாடப்பிரிவும், தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் புதிதாக ஒரு பாடப்பிரிவும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பாலக்கோடு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

கல்லூரிகளுக்கு மாணவர்கள் சென்று வர வசதியாக பென்னாகரத்தில் இருந்து பாலக்கோடு வரும் அரசு பஸ் வழித்தடம் நீட்டிப்பு செய்து வெள்ளிச்சந்தை வரை இயக்கப்படுகிறது. பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 3 வழித்தடங்களில் 2 நகர பஸ்கள் மற்றும் ஒரு புறநகர் பஸ் வழி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவைகளை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்