சேவூரில் ஈத்கா மைதானத்தில் மண் எடுக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு; பொக்லைன் எந்திரம் சிறை பிடிப்பு

சேவூரில் ஈத்கா மைதானத்தில் மண் எடுக்க முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பொக்லைன் எந்திரத்தையும் சிறை பிடித்தனர்.

Update: 2019-08-16 23:30 GMT
சேவூர்,

சேவூர் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் சேவூர் வடக்கு வீதி பகுதியிலும், சேவூர் ஏரிமேடு பகுதியிலும் முஸ்லிம்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரு பகுதிகளிலும் பள்ளிவாசல் உள்ளது. இவர்களுக்கு சேவூர் சந்தையப்பாளையம் அருகே இறந்தவர்களை அடக்கம் செய்ய ஈத்கா மைதானம் (கபரஸ்தான்) சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

இந்நிலையில் சேவூர் வடக்கு வீதி கோபி சாலையிலிருந்து சந்தையப்பாளையம் வழியாக புளியம்பட்டி சாலைவரை இணைப்பு சாலை உள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இந்த தார்சாலை குண்டும், குழியுமாக இருந்து வந்தது. இதனால் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். இதை தொடர்ந்து இச்சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில் சாலைபணி வேலைக்காக அப்பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம்களின் ஈத்கா மைதானத்தில் மண் எடுப்பது தெரிய வந்தது. இதையறிந்த முஸ்லிம்கள் ஒன்று திரண்டு மண் எடுத்துக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேவூர் போலீசார், வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் ஒப்பந்ததாரர் மண் எடுத்தது தவறு என்று ஒப்புக் கொண்டு இனிமேல் மண் எடுக்க மாட்டேன் எனவும் மண் எடுத்த இடத்தை சீரமைத்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதை தொடர்ந்து முஸ்லிம்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்