பவானிசாகர் பாலத்தை கட்டித்தரக்கோரி அமைச்சர்களை முற்றுகையிட்டு பெண்கள் கோரிக்கை

பவானிசாகர் பாலத்தை கட்டித்தரக்கோரி அமைச்சர்களை முற்றுகையிட்டு பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2019-08-17 00:00 GMT
பவானிசாகர்,

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்த பின்னர் பவானிசாகர் அணை பூங்கா வழியாக அவர்கள் கார்களில் வெளியே சென்றனர். அப்போது 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சர்கள் சென்ற கார்களை முற்றுகையிட்டனர். உடனடியாக அவர்கள் கார்களை நிறுத்தி என்ன என்று கேட்டனர்.

அப்போது அந்த பெண்கள் கூறியதாவது:-

பவானிசாகர் பவானி ஆற்றின் மறுபக்கம் புங்கார், காராச்சிகோரை, சுஜில்குட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு செல்ல பவானிசாகர்தான் வழி. பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வந்தன.

எங்கள் ஊர்களுக்கு டவுன் பஸ்சும் வந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பாலம் பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவே 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்கு செல்லவேண்டிய நாங்கள் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்ற வேண்டியது உள்ளது.

எங்கள் கிராமத்து மாணவ-மாணவிகள் பவானிசாகர், தொட்டம்பாளையம் பள்ளிக்கூடங்களில் படித்து வருகிறார்கள். எங்கள் கிராமங்களுக்கு பவானிசாகரில் இருந்து பஸ்கள் வராததால் தினமும் குழந்தைகளை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீட்டுக்கும் அழைத்துச்செல்ல வேண்டியது இருக்கிறது.

சாதாரண கூலி வேலைக்கு செல்லும் நாங்கள் தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்படுகிறது. இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே விரைவாக பவானிசாகர் பாலத்தை பழுது நீக்கி வாகனங்கள் செல்லும் வகையில் கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

அவர்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பாலம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். பணிக்கான டெண்டர் விடப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் கவலை இல்லாமல் கலைந்து செல்லலாம் என்றார். அவருடைய பதிலைக்கேட்ட பொதுமக்கள் வாகனங்களுக்கு வழிவிட்டனர்.

இதுகுறித்து புங்கார் காலனி பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் கூறும்போது, ‘2 ஆண்டுகளாக இதே பதிலைத்தான் கூறுகிறார்கள். இன்னும் 15 நாட்களில் பாலம் வேலை தொடங்கவில்லை என்றால், எங்கள் 10 கிராம மக்களும் பவானிசாகரில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம்’ என்றார்கள்.

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்