நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு: நாளை மறுநாள் முதல் அமல்
நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
நெல்லை,
நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெல்கட்டும் செவல் கிராமத்தில் ஒண்டிவீரன் நினைவு நாள் வருகிற 20-ந் தேதியும், பூலித்தேவன் ஜெயந்தி வருகிற 1-ந் தேதியும் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் பல்வேறு அமைப்பினர் வந்து கலந்து கொள்ள உள்ளனர்.
இதனால் சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியைப்பேணும் பொருட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் 2-ந்தேதி காலை 6 மணி வரை 15 நாட்களுக்கு நெல்லை மாவட்டத்தில் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டமாக கூடி வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற இதர தடை செய்யப்பட்ட ஆயுதங்களுடன் ஊர்வலம் செல்வதற்கும், மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியின்றி அன்னதானம் வழங்குவதற்கும், பால்குடம், முளைப்பாரி போன்றவற்றுடன் ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த வழியே வாடிக்கையாக செல்லும் அரசு, தனியார் பயணிகள் பஸ்கள், ஆம்னி பஸ்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லுாரி பஸ்கள், மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் இதர வாகனங்கள் தவிர ஒண்டி வீரன் நினைவு தினம் மற்றும் பூலித்தேவன் ஜெயந்தி ஆகியவற்றுக்கு வரும் தொண்டர்களை போலீசாரின் அனுமதியின்றி ஏற்றி வரும் மற்ற சுற்றுலா வாகனங்கள் நெல்லை மாவட்ட எல்லைக்குள் நுழைய தடை விதித்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.