டாஸ்மாக் கடை விற்பனையாளர் படுகொலையை கண்டித்து, பெரம்பலூர்-அரியலூரில் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த டாஸ்மாக் விற்பனையாளர் படுகொலையை கண்டித்து பெரம்பலூர்- அரியலூரில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஒருங்கிணைந்த சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-16 22:30 GMT
பெரம்பலூர்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி இரவு ஒரு டாஸ்மாக் கடையில் மர்மநபர்கள் புகுந்து, அதன் விற்பனையாளர் ராஜாவை கழுத்தை அறுத்து படுகொலை செய்து, கடையில் இருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஒருங்கிணைந்த சங்கத்தினர் நேற்று மாலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் டாஸ்மாக் விற்பனையாளர் ராஜாவை படுகொலை செய்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களுக்கு போலீசார் தக்க தண்டனை வழங்கிடவும், பலியான ராஜாவின் குடும்பத்தினருக்கு அரசு நிதியாக ரூ.50 லட்சம் வழங்கிடவும் வேண்டும்.

இனி தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இரவு 8.30 மணியளவில் இருந்து ஒரு போலீசாரை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும் அல்லது பணி நேரத்தை குறைத்து இரவு 8 மணியளவில் கடையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து இது தொடர்பான ஒரு மனுவினை ஆர்ப்பாட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு அரியலூர் மாவட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஒருங்கிணைந்த சங்கத்தினர் ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்