தொடர் நீர்வரத்து காரணமாக ஒரே வாரத்தில் 10 அடி உயர்ந்த வைகை அணை நீர்மட்டம்
தொடர் நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஒரே வாரத்தில் 10 அடி உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் போனதால், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 27 அடியாக சரிந்தது. இதன்காரணமாக குடிநீருக்காக வைகை அணையை மட்டுமே நம்பியுள்ள மதுரை மாநகரில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவானது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பலத்த மழை பெய்தது.
இதனையடுத்து முல்லைப்பெரியாறு அணை மற்றும் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரித்ததால், அங்கிருந்து தேனி மாவட்டத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
இதன்காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து கடந்த ஒருவாரமாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. தொடர் நீர்வரத்து காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 10 அடி உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 9-ந்தேதி 32 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் தற்போது 42 அடியாக உயர்ந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் தற்போது 42 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் வைகை அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
நேற்றுக்காலை 6 மணி நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 42.34 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,496 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 1,147 மில்லியன் கனஅடியாக இருந்தது.