ஆண்டிப்பட்டி அருகே, விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறிப்பு

ஆண்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் இருந்து 13 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை பறித்து விட்டு ஆட்டோவில் தப்பிச்சென்ற மர்மநபர்கள் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-08-16 22:45 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், வைகை அணை பகுதியை சேர்ந்தவர் சிவன்பாண்டி(வயது32). இவருடைய மனைவி கங்கம்மாள்(24). இவர்கள் இல்ல விழாவையொட்டி உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் வைகை அணையில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு சென்றனர்.

வைகை அணையை அடுத்துள்ள சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலகத்திற்கு முன்பாக சென்றபோது எதிரே வந்த ஒரு ஆட்டோ சிவன்பாண்டி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஆட்டோவில் இருந்து வந்த மர்மநபர்கள் 3 பேர் கங்கம்மாள் பையில் வைத்திருந்த 13 பவுன் நகை மற்றும் சிவன்பாண்டி வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்து விட்டு ஆட்டோவில் ஏறி தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து சிவன்பாண்டி வைகை அணை போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

வழக்கமாக விபத்து நடந்தால் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ப்பது வழக்கம். ஆனால் இந்த சம்பவத்தில் ஆட்டோவில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யாமல் அவர்களின் நகை, பணத்தை பறித்து சென்று விட்டனர். இது மனிதாபிமானம் அற்றுபோய் கொண்டிருக்கிறதோ என எண்ண தோன்றுகிறது.

மேலும் செய்திகள்