மாப்படுகை ஊராட்சியில் மீண்டும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும்; வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் மனு

மாப்படுகை ஊராட்சியில் மீண்டும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-08-16 22:45 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்கக்கோரி அரசை வலியுறுத்தியும், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும், மாப்படுகை ரெயில்வே கேட் பகுதியில் விரைவில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணியை நடைமுறைப்படுத்த கோரியும், குளங்கள், குட்டைகளில் தண்ணீரை சேமிக்கவும், வாய்க்கால், வடிகால்களை தூர்வார கோரியும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் வலியுறுத்தினர்.

இந்த தீர்மானங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை தவிர மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற தயாராக இருப்பதாக ஒன்றிய அலுவலர் பூவராகவன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கிராமசபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து கிராம மக்கள் சிலர் அரசு அலுவலர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து சென்ற பிறகு ஒரு சிலரை வைத்து மீண்டும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மாப்படுகை கிராமத்தை சேர்ந்த மகேஷ், அருண் மற்றும் சிலர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், பொதுமக்கள் வலியுறுத்திய கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய அலுவலர்கள் மறுத்ததால் கிராமசபை கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டதாகவும், அதன்பிறகு கூட்டம் நடத்தியதாக போலி ஆவணம் தயார் செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் மாப்படுகை ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்