பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி திருவாரூரில் டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-16 23:00 GMT
திருவாரூர்,

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியை அடுத்த ஆவல் நத்தத்தில் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து விற்பனையாளர் ராஜா என்பவரை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு ரூ.1½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று போராட்டங்களில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அருள்மணி தலைமை தாங்கினார். இதில் டாஸ்மாக் தொ.மு.ச. அமைப்பின் மாவட்ட தலைவர் தமிழரசன், சி.ஐ.டி.யூ. டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் லெனின், ஏ.ஐ.டி.யூ.சி. டாஸ்மாக் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் பணியாளரை படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர் ராஜாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதுடன், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். இரவு விற்பனையை 8 மணியுடன் நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்