செங்குன்றம் அருகே காரில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் வாலிபர் சிக்கினார்

செங்குன்றம் அருகே காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-16 22:00 GMT
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த சோலையம்மன் நகர் 20-வது தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயசு 33). இவருக்கு சொந்தமான காரில் செம்மரக் கட்டைகள் மறைத்து வைத்திருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜவகர் பீட்டர் மற்றும் போலீசார் மோகன்ராஜ் வீட்டுக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த காரை தீவிரமாக சோதனை செய்தனர்.

அப்போது, அதில் சுமார் 1 டன் (1000 கிலோ) எடை கொண்ட செம்மரக் கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் காரை பறிமுதல் செய்து, மோகன் ராஜை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து மாதர்பாக்கம் வனத்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர், வனத்துறை அலுவலர் சீனிவாசன் மற்றும் வனத்துறை போலீசார் அங்கு விரைந்து வந்து செம்மரக் கட்டைகளையும், காரையும் மாதர்பாக்கம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்தநிலையில், பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டையின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்