திருமணங்குடி குப்பன் வாய்க்கால் தடுப்பணை கதவுகளை சீரமைக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருமணங்குடி குப்பன் வாய்க்கால் தடுப்பணை கதவுகளை சீரமைக்கக்கோரி விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-16 23:30 GMT
வேளாங்கண்ணி,

கீழையூர் ஒன்றியம் மீனம்பநல்லூர் ஊராட்சி திருமணங்குடியில் குப்பன் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் ஏற்வைகாட்டில் இருந்து பிரிந்து சந்திரநதி வருகிறது. இந்த நதியில் இருந்து பரிந்து குப்பன் வாய்க்கால் வழியாக தண்ணீர் வேதாரண்யம் கால்வாய் சென்று பின்னர் கடலில் கலக்கிறது. குப்பன் வாய்க்கால் மூலம் மீனம்பநல்லூர், திருமணங்குடி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேலும் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் இருந்து மழைநீர் வெளியேற்றப்படும் வடிகாலாகவும் பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருமணங்குடியில் உள்ள குப்பன் வாய்க்கால் கடைசி பகுதியில் தடுப்பணை கட்டுப்பட்டுள்ளது. தற்போது அதில் உள்ள கதவுகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பாசனத்திற்காக தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் கடலில் வீணாக கலக்கிறது.

உப்புநீர் விளை நிலங்களில் உட்புகுந்து விளைச்சல் பாதிக்கப்படுவதாகவும், தடுப்பணை கதவுகளை சீரமைக்கக்கோரி காவிரி விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் ஸ்ரீதர் தலைமையில் விவசாயிகள் நேற்று தடுப்பணை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்பணை கதவுகளை சீரமைக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் மாநில பொருளாளர் ஸ்ரீதர் கூறியதாவது, இன்னும் ஒருவார காலத்திற்குள் இந்த தடுப்பணை கதவுகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்