கந்தர்வகோட்டை அருகே, லாரி மோதி தந்தை-மகன் பலி
கந்தர்வகோட்டை அருகே லாரி மோதியதில் தந்தை-மகன் பலியானார்கள்.;
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள முதுகுளம் கிராமத்தை சேர்ந்த முருகையன் (வயது 58), விவசாயியான இவரது மகன் தர்மலிங்கம். இவர்கள் 2 பேரும் முதுகுளத்தில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை தர்மலிங்கம் ஓட்டினார். மோட்டார் சைக்கிள் புதுநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய முருகையன், தர்மலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்தர்வகோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முருகையன், தர்மலிங்கம் ஆகியோரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.