நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை, 130 அடியை தாண்டிய முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடியை தாண்டியது.;
தேனி,
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயரம் 152 அடியாகும். ஆனால், 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்வதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
கடைசியாக, கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந்தேதி இந்த அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 8, 9-ந்தேதிகளில் பெய்த பலத்த மழையால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
கடந்த 2 நாட்களாக மழைப் பொழிவு குறைந்துள்ளது. பலத்த மழை பெய்யாவிட்டாலும் அவ்வப்போது சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 129.60 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 3,729 கன அடியாக இருந்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்ததால், நேற்று காலை 6 மணி நிலவரப்படி முல்லைப்பெரியாறு பகுதியில் 5.4 மி.மீ. மழையும், தேக்கடியில் 3.6 மி.மீ மழையும் பதிவாகி இருந்தது.
நேற்று காலை அணையின் நீர்மட்டம் 130 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,404 கன அடியாக குறைந்தது. அணையின் நீர் இருப்பு 4,697 மில்லியன் கன அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மாலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 130.10 அடியாக இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்யும்பட்சத்தில் நீர்மட்டம் மீண்டும் கிடுகிடுவென உயர வாய்ப்பு உள்ளது.