இட்டமொழி அருகே பரிதாபம் - வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலி
இட்டமொழி அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பரிதாபமாக இறந்தார்.
இட்டமொழி,
நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 40). காடன்குளத்தில் உள்ள ஒரு தனியார் டிரைவிங் பயிற்சி பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி இசைசெல்வி (35). இவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதே ஊரை சேர்ந்த இசக்கி கோனார் (55) என்பவர் வீடு புதுப்பிக்கும் பணி நடந்தது. அந்த வீட்டின் கட்டிட வேலைக்காக இசைசெல்வி சென்று இருந்தார். மாலை 4 மணியளவில் தொழிலாளிகள் கட்டிடத்தின் கீழே வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் கீழே வேலை செய்து கொண்டிருந்த இசைசெல்வி மீது கட்டிட இடிபாடுகள் விழுந்து அவரை அமுக்கியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளை அகற்றி இசைசெல்வியை மீட்டனர். ஆனால் இசைசெல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
மேலும் கற்கள் விழுந்ததில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கட்டிட தொழிலாளிகள் முருகன் (40), கோபால் (35) ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வடக்கு விஜயநாராயணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இசைசெல்வி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.