புழல் அருகே காருடன் தொழில் அதிபர் கடத்தல் சரமாரியாக தாக்கி ரூ.1 லட்சத்தை பறித்தனர்

புழல் அருகே காருடன் தொழில் அதிபரை கடத்தி, சரமாரியாக தாக்கி ரூ.1 லட்சம் பறித்த மர்மஆசாமிகள் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-08-11 22:15 GMT
செங்குன்றம்,

சென்னை மதுரவாயலை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணன்(வயது 49). தொழில் அதிபரான இவர், செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் கார் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன், கம்பெனியில் இருந்து காரில் வீட்டுக்கு சென்றார். புழல் அருகே மதுரவாயல் மேம்பாலத்தில் ஏறுவதற்காக சென்றார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், திடீரென காரை மறித்து நிறுத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கிருஷ்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது காரில் ஏறினர்.

பின்னர் அவரை சரமாரியாக தாக்கி, கத்திமுனையில் ஒருவர் மிரட்ட, மற்றொருவர் காரை ஓட்டினார். காருடன் அவரை கும்மிடிப்பூண்டிக்கு கடத்தி சென்றனர். மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் காரை பின்தொடர்ந்து சென்றார்.

செல்லும் வழியில் கிருஷ்ணனை கடுமையாக தாக்கிய கடத்தல் ஆசாமிகள், அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பறித்தனர். பின்னர் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையில் காரை நிறுத்திய அவர்கள், காருடன் கிருஷ்ணனை விட்டுவிட்டு, கீழே இறங்கி மோட்டார் சைக்கிளில் வந்த தங்கள் கூட்டாளியுடன் தப்பிச்சென்றுவிட்டனர்.

இதையடுத்து கிருஷ்ணன் காரில் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார். ஆனால் சம்பவம் நடந்தது புழல் பகுதியில் என்பதால் இதுபற்றி புழல் போலீசில் புகார் செய்யும்படி கூறி அவரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதைதொடர்ந்து கிருஷ்ணன், புழல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் கிருஷ்ணனை காரில் கடத்தி பணம் பறித்துவிட்டு தப்பிய 3 பேரையும் தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்