பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மத்திய ரெயில்வே வழித்தடமான கல்யாண்-தானே இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் மாலை 3.50 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 10.54 மணி முதல் மாலை 3.52 மணி வரை விரைவு ரெயில்கள் அனைத்தும் கல்யாண்-தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்த ரெயில்கள் கல்யாண்-தானே இடையே உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். தானேக்கு பிறகு மீண்டும் விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் மின்சார ரெயில்கள் 20 நிமிடம் காலதாமதமாக இயங்கும்.
துறைமுக வழித்தடம்
துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி-சுன்னாப்பட்டி, பாந்திரா இடையே இன்று காலை 11.40 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 11.34 மணி முதல் மாலை 4.23 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கும், காலை 9.53 மணி முதல் மதியம் 2.44 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது.
இதேபோல் காலை 9.56மணி முதல் மாலை 4.16 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து பாந்திரா, கோரேகாவுக்கும், காலை 10.45மணி முதல் மாலை 4.58 மணி வரை பாந்திரா, கோரகாவிலிருந்து சி.எஸ்.எம்.டி.க்கும் ரெயில்கள் இயக்கப்படாது. இந்த நேரத்தில் பன்வெல் - குர்லா இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
மேற்கு ரெயில்வே
மேற்கு ரெயில்வேயில் சாந்தாகுருஸ்-கோரேகாவ் இடையே இன்று காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை ஸ்லோ வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இந்த நேரத்தில் ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் சாந்தாகுருஸ்-கோரேகாவ் இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் ராம்மந்திர் ரெயில் நிலையத்தில் நிற்காது. இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.