காதல் தோல்வியால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் தோல்வியால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் பிரகாசம் சின்னசாமி. இவருடைய மகன் சிபி(வயது 21). இவர், சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், சக்தி நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் விடுதி அறையில் இருந்து நீண்டநேரம் ஆகியும் சிபி, வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக மாணவர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது, தனது அறையில் சிபி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
காதல் தோல்வி
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ராயலாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார், தூக்கில் தொங்கிய சிபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அதில், சிபி தனது சொந்த ஊரில் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த பெண், காதலை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. இதனால் சிபி, காதல் தோல்வியால் மனம் உடைந்து காணப்பட்டு உள்ளார். அத்துடன் சிபி, தேர்வில் பல்வேறு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் மனம் உடைந்த சிபி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், செந்தமிழ் நகர் அனெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு(36). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரம்யா(30).
சுரேஷ்பாபுவுக்கு குடிப் பழக்கம் இருந்ததாகவும், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சுரேஷ்பாபுவை, அவருடைய மனைவி ரம்யா கண்டித்தார்.
இதனால் இருவருக்குமே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சுரேஷ், வீட்டின் மற்றொரு அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராயலாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.