மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல்
மின்தடையை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், வழுதலம்பேடு பகுதியில் கடந்த சில நாட்களாக சரிவர மின்சாரம் வழங்கப்படாமல் இருந்தது. இதை கண்டித்து அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் குன்றத்தூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அங்கிருந்து கலைய செய்தனர்.
இதுகுறித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில்:-
திருமுடிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வழுதலம்பேடு பகுதியில் செல்லியம்மன் நகர், பஜனை கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, விஜயராகவபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 5 நாட்களாக சரிவர மின்சாரம் வரவில்லை.
டிரான்ஸ்பார்மர் வெடித்தது
இதற்கு காரணம் இந்த பகுதியில் மிகவும் பழமையான டிரான்ஸ்பார்மர் ஒன்று இருந்தது. அந்த டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதால் இந்த பகுதியில் சில நாட்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. சில மணி நேரங்கள் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. அதுவும் குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால் எந்த பயனும் இல்லாமல் உள்ளது. இதனால் நாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து தற்போது மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை மாற்றி உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து நாங்கள் கலைந்து செல்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மறியல் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.