கர்நாடக இசையில் தமிழ் மொழியின் பெருமைகள் குறித்த படத்தொகுப்பு அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்டார்
கர்நாடக இசையில் தமிழ் மொழியின் பெருமைகள் குறித்த படத்தொகுப்பை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்டார்.
சென்னை,
கர்நாடக இசைக்கலைஞர்களான ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் தமிழ் மொழியின் பெருமைகள் குறித்த பாடலை கர்நாடக இசையில் பாடி உள்ளனர். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாட்டு ஆய்வு இருக்கை, கர்நாடக தமிழ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து இந்த பாடலை பின்னணியாக கொண்டு தமிழின் பெருமைகளை விளக்கும் வகையிலான படத்தொகுப்பை உருவாக்கி உள்ளது.
இதன் வெளியீட்டு விழா சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. ஆய்வு இருக்கை பொறுப்பாளர் ரபிசிங் வரவேற்றார்.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் விஜயராகவன் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத் தொகுப்பை வெளியிட்டு பேசினார்.
விழாவில் மொழி பெயர்ப்புத்துறை இயக்குனர் அவ்வை அருள், பிரபல பாடகி நித்தியஸ்ரீ மகாதேவன், பாடல் ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் ராம்நாத் பகவத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், முனைவர் விஜய் நன்றி கூறினார்.