கயத்தாறு பகுதியில் குளங்கள் தூர்வாரும் பணி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கயத்தாறு பகுதியில் குளங்கள் தூர்வாரும் பணியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-10 22:15 GMT
கயத்தாறு,

கயத்தாறு தாலுகா கடம்பூரை அடுத்த சிதம்பராபுரம் அணில்குளத்தில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் செலவில் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடி அசைத்து குளத்தை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பொக்லைன் எந்திரம் மூலம் குளத்தை தூர்வாரி, கரையை பலப்படுத்தும் பணி நடந்தது.

பின்னர் கயத்தாறு அருகே சிதம்பரம்பட்டி கண்மாயை குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரும் பணியையும், நாலாட்டின்புத்தூர் குளத்தை குடிமராமத்து திட்டத்தின்கீழ் ரூ.5 லட்சம் செலவில் தூர்வாரும் பணியையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

முன்னதாக கயத்தாறு அருகே கூட்டுப்பண்ணை விலக்கில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் கட்டப்பட்ட பஸ் நிறுத்த கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார். இதில் கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், யூனியன் ஆணையாளர்கள் முத்துகுமார், சீனிவாசன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வினோபாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கோவில்பட்டி லட்சுமி மில் காலனியில் யூனியன் பொது நிதியில் இருந்து ரூ.1½ லட்சம் செலவில் ஆழ்குழாய் கிணறு, மின் மோட்டாருடன் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார்.

தொடர்ந்து அவர், கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த உலக தாய்ப்பால் வார விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி, விழாவை தொடங்கி வைத்தார். மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆண்டுதோறும் ரூ.24 லட்சத்து 90 ஆயிரத்தை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கான சான்றிதழை மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பரிதா ஷெரினிடம், அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார். அகில இந்திய வானொலி ஒலிபரப்பாளர் சந்திரபுஷ்பம் உலக தாய்ப்பால் வார விழா குறித்து கவிதை வாசித்தார்.

விழாவில் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, எம்.எல்.ஏ.க்கள் சண்முகநாதன், சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் (பொறுப்பு) கோவிந்தராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா, அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவர் பூவேசுவரி, டாக்டர்கள் துரை பத்மநாபன், விமலாதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, சமூகநல அலுவலர் தனலட்சுமி, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்