‘ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று விட்டு தி.மு.க.வை விமர்சியுங்கள்’ தமிழிசை சவுந்தரராஜனுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி

‘ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று விட்டு தி.மு.க.வை விமர்சியுங்கள்‘ என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2019-08-10 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் சமூக மேம்பாட்டு திட்டம் சார்பில் ஆண்டுதோறும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள மகளிர் மற்றும் மாணவர்களுக்கு மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தருவைகுளம் கிராமத்தில் உள்ள பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி நேற்று காலையில் தருவைகுளம் புனித கத்தரீன் பெண்கள் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தூய மரியன்னை கல்லூரி பேராசிரியை குழந்தை தெரஸ் வரவேற்றார். கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:-

பல ஆண்டுகளுக்கு முன்பு கல்வி என்பது அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்கவில்லை. இதில் பெண் கல்வி என்பது நினைக்க முடியாத ஒன்றாக இருந்தது. இந்த சமூக சூழலை மாற்றி அனை வரும் கல்வி பயில வேண்டும், பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என்று போராடி பெற்று தந்தவர்கள் பெரியார் மற்றும் திராவிட கழகத்தினர்.

பெண்கள் வேலைக்கு செல்வது, அவர்களின் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை அவர்களே எடுக்கும் நிலை உருவாகி உள்ளது. பெண்களால் அனைத்தையும் செய்ய முடியும். சில நாட்களுக்கு முன்பு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 தலைமை பணியில் இருந்தவர்களில் 2 பேர் பெண்கள் தான். எனவே பெண்கள் தங்களின் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, கனிமொழி எம்.பி. அங்கு மகளிர் மற்றும் மாணவர்களுக்காக நடத்தப்படும் பயிற்சிகளான சணல் கைவினை பொருட்கள் தயாரித்தல், தையல் பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி, மாடி தோட்டம் உள்ளிட்டவற்றை தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை குறித்து கனிமொழி எம்.பி.யிடம் மனுக்கள் கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்ட அவர் நிச்சயமாக மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக நேற்று காலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி தாமதமாக வருவதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரியும். அங்கு பல சூழ்ச்சிகள் காரணமாக தேர்தல் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தற்போது தேர்தல் நடத்தப்பட்டு அதில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட வேலூர் தொகுதியில் தி.மு.க. வாக்கு வித்தியாசம் குறைவு தான். இது தி.மு.க.விற்கு வெற்றி இல்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். அவர் ஏதாவது ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு, தி.மு.க.வை விமர்சித்தால் பரவாயில்லை. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் அவர் தி.மு.க.வை விமர்சித்து உள்ளார். தி.மு. க.வை விமர்சிப்பதற்கு தமிழிசைக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க.விற்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

லடாக் பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. அதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தான் தி.மு.க. எதிர்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்