மண் சரிவால் சாலை துண்டிப்பு: அவலாஞ்சி மின் உற்பத்தி நிலையத்தில் சிக்கியவர்களில் 11 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
பலத்த மழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால் சாலை துண்டிக்கப்பட்டதால், அவலாஞ்சி மின் உற்பத்தி நிலையத்தில் சிக்கியவர்களில் 11 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே அவலாஞ்சியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருகிறது. இங்கு நீர்மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.
இங்கிருந்து ஊட்டிக்கு ஒரே ஒரு அரசு பஸ் காலை மற்றும் மாலை நேரத்தில் இயக்கப்படுகிறது. காலை 6.30 அவலாஞ்சியில் புறப்படும் அரசு பஸ் ஊட்டிக்கு 7.30 மணிக்கு செல்கிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் அரசு பஸ் 7.30 மணிக்கு அவலாஞ்சிக்கு சென்றடையும்.
வழக்கம் போல் நேற்று முன்தினம் அவலாஞ்சியில் இருந்து காலை 6.30 மணிக்கு அரசு பஸ் ஊட்டிக்கு புறப்பட்டது. பஸ்சை டிரைவர் சந்திரன் ஓட்டியுள்ளார். பஸ்சில் 5 பயணிகள் மட்டும் இருந்தனர். பஸ் புறப்பட்டு 200 மீட்டர் தூரம் சென்ற நிலையில் பலத்த மழை பெய்தது. இதனால் டிரைவர் மீண்டும் பஸ்சை திருப்பி கொண்டு அவலாஞ்சி மின் உற்பத்தி நிலையத்துக்கு வந்து விட்டார்.
பலத்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் அவலாஞ்சி மின்வாரியத்துக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் டிரைவர் சந்திரன் பயணிகள், மின்வாரிய ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது.
கடந்த 4 நாட்களாக இங்கு வாகனங்கள் செல்ல முடியாததால் மின் உற்பத்தி நிலையத்தில் உள்ளவர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதற்கிடையில் மின்வாரிய ஊழியர் வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனால் மண்சரிவால் சாலை துண்டிக்கப்பட்டதால் அவர்கள் சாலை வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 4 பேர் மீட்கப்பட்டு குன்னூரில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பலத்த மழையில் ஊட்டி-அவலாஞ்சி சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அவலாஞ்சி துண்டிக்கப்பட்டு உள்ளது. மழை குறைந்தால் மீதமுள்ளவர்களை சாலை மார்க்கமாக மீட்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்ததால், ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்களில் கோவையை சேர்ந்த ராஜேஷ்(வயது 35), மேட்டூரை சேர்ந்த ஆனந்த்(43), அவரது மனைவி மற்றும் கைக்குழந்தை உள்பட 7 பேர் மீட்கப்பட்டு நேற்று மதியம் 12 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இவர்கள் தவிர இன்னும் 80 பேர் அவலாஞ்சி மின் உற்பத்தி நிலையத்தில் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்களுக்கு தேவையான பால், ரொட்டி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. அவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவலாஞ்சியில் நேற்று காலை நிலவரப்படி 45 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.