நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தமிழகம் சார்பில் குரல் எழுப்பப்படும் அமைச்சர் பேட்டி

நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தமிழகம் சார்பில் குரல் எழுப்பப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Update: 2019-08-10 23:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட பெண்கள் காப்பீட்டு வார்டு திறப்பு விழா, நோயாளிகளுக்கான தகவல் தொலைக்காட்சி தொடக்க விழா மற்றும் திறந்த வெளியுடன் கூடிய புதிய கலையரங்கத்தின் திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட பெண்கள் காப்பீட்டு வார்டு, நோயாளிகளுக்கான தகவல் தொலைக்காட்சி மற்றும் புதிய கலையரங்கத்தினை திறந்து வைத்தார். இதில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டீன் மீனாட்சி சுந்தரம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விஜயபாஸ்கர் பேட்டி

தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வரும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட வார்டுகள் படிப்படியாக தனியார் மருத்துவமனைகளை மிஞ்சும் அளவிற்கு நவீன மயமாக்கப்படும். காஞ்சீபுரம் அத்திவரதரை தரிசனம் செய்ய ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் செல்கின்றனர். அந்த பகுதியில் வரும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்க 650 பேர் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் யாருக்கும் எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல், தமிழக சுகாதாரதுறை தடுத்து வருகிறது.

நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் அங்கு தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கு 21 நடமாடும் மருத்துவ குழுக்கள், 8 தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் சேலத்தில் இருந்து மருத்துவக்கல்லூரி டீனும், சுகாதார துறையின் துணை இயக்குனரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட நியமிக்கப்பட்டு உள்ளனர். கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் உதவி கேட்டால் முதல்-அமைச்சரின் ஆலோசனை பெற்று மருத்துவ உதவி செய்ய தயாராக உள்ளோம். போதுமான மருத்துவ குழுவும் தயார் நிலையில் உள்ளது. நெக்ஸ்ட் தேர்வை எதிர்த்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தமிழகம் சார்பில் குரல் எழுப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அன்னவாசல்

முன்னதாக அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில், பரம்பூர் ஊராட்சி, கடம்பராயன்பட்டியில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியின் கீழ் தலா ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 3 தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 37 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் திருமண உதவி தொகைக்கான காசோலைகளும், 296 கிராம் தங்க நாணயங்கள் என மொத்தம் 180 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மேலும் செய்திகள்