கடன் வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி - 13, 16-ந் தேதிகளில் நடக்கிறது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடன் வழங்கும் சிறப்பு வழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி 13,16-ந் தேதிகளில் நடக்கிறது என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-10 22:00 GMT
திருவண்ணாமலை,

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கல்விக்கடன், கறவை மாடு கடன், ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டத்தில் 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மற்றும் 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டியிலும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டியிலும் கடன் வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.5 ஆயிரம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையிலும், திட்டம் 2-ன் கீழ் ரூ.30 லட்சம் வரையிலும் 3 சதவீத வட்டியிலும் கல்வி கடன் உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்த சிறப்பு விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சி 13-ந் தேதி செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் மற்றும் 16-ந் தேதி ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் தேசிய சிறுபான்மையினர் வாரியத்தின் உறுப்பினர்கள் வி.டி.எஸ். எஸ்.கவுதம்குமார் சேத்தியா, டாக்டர் கோவிந்தராஜ்வரதன் ஆகியோர் கலந்துகொண்டு வழிக்காட்டுதல் தொடர்பான ஆலோசனை வழங்க உள்ளனர். எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்களான கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் மதத்தினர் இந்த சிறப்பு விழிப்புணர்வு வழிக்காட்டுதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்