பொதுத்துறை நிறுவனமாக மாற்றுவதை கண்டித்து துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக மாற்றுவதை கண்டித்து திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-10 23:00 GMT
பொன்மலைப்பட்டி,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 41 படைகலன் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட தளவாட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இவற்றை இந்திய ராணுவத்தினர் மற்றும் மத்திய போலீசார் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதை கண்டித்து பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதுபோல் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் ஹெச்.ஏ.பி.பி. தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் நேற்று தங்களது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக அவர்கள் துப்பாக்கி தொழிற்சாலை ரவுண்டானாவில் இருந்து தொழிற்சாலையின் மெயின் கேட் வரை கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் ஊர்வலமாக வந்து தொழிற்சாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஹெச்.ஏ.பி.பி. தொழிலாளர்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையிலும், பெல் தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் தீபன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் பிரபு மற்றும் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அகில இந்திய பாதுகாப்புத்துறை தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டின் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு நாடு முழுவதும் 41 படைகலன் தொழிற்சாலைகள் உள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் உலகத்தரத்திற்கு நிகராக உள்ளது. இந்தநிலையில் பாதுகாப்புத்துறை நிறுவனங்களை பொதுத்துறையாக மாற்றினால், பங்குகளை விற்கும் போது, அது ஒருசில முதலாளிகளின் கைக்கு போய்விடும்.

பாதுகாப்புதுறை தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகள் கொடுத்தவை. அந்த நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தி தனியாருக்கு விற்று விடுவார்கள். பாதுகாப்புத் துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் 82 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 40 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுத்துறை நிறுவனமாக மாற்றும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 20-ந்தேதி முதல் ஒரு மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்