ரூ.35 கோடியில் குடிமராமத்து பணி; அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

மாவட்டத்தில் 300 சிறுபாசன குளங்கள் மற்றும் 1994 ஊருணிகள் ரூ.35 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து செய்யப்படுகிறது. பணியினை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-10 22:00 GMT
சிவகங்கை,

மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் குடிமராமத்து பணி தொடக்க விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் பாஸ்கரன் பணியினை தொடங்கி வைத்தார்.

அவர் மீனாட்சிபுரம் கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் ஊருணி ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜையையும் அதனைதொடர்ந்து குளம் சீரமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தார். அத்துடன் இடையமேலூர் சிறுபாசனக் கண்மாய் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டிலுள்ள கண்மாய்கள், ஊருணிகள், குளங்கள் ஆகியவற்றினை தூர்வாரி ஆழப்படுத்தி மேம்படுத்தி மழைநீரினை சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தினை அதிகரிக்கச் செய்யும் வகையில் நீர்நிலைகளை சீரமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 4,464 சிறுபாசனக் குளங்கள் மற்றும் 4,325 ஊருணிகள் உள்ளன. இதில் முதற்கட்டமாக 300 சிறுபாசனக் குளங்கள் மற்றும் 1,994 ஊருணிகள் ரூ.35 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்து பணியினை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாவட்டத்தில் திட்டமிட்டப்படி தேர்வு செய்யப்பட்ட ஊருணிகள் மற்றும் குளங்கள் விரைவாக சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சிவகங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் அசோகன், கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் நாகராஜன், ஊரக வளர்ச்சித் திட்ட பொறியாளர் முருகன், குடிமராமத்து பணி திட்ட கண்காணிப்பு அலுவலர் பூங்குழலி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காமராஜ், ரஜினிதேவி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஆனந்தன், கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் ராஜா, மோகன், பாண்டி பலர் கலந்து கொண்டனர்.

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 30 ஊராட்சிகளில் 30 கண்மாய் மற்றும் ஊருணிகள் ரூ.1 கோடியில் குடிமராமத்து செய்யப்படுகிறது. முதல் கட்டமாக பிரான்மலையில் உள்ள நிலமுடையான் கண்மாயில் சிங்கம் புணரி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா தலைமையில் பணி தொடங்கியது. தாசில்தார் பஞ்சவர்ணம் மற்றும் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது வருவாய் ஆய்வாளர் சாந்தி, துணை வட்டாட்சியர் கமலக்கண்ணன், ஒன்றிய பொறியாளர் சிவக்குமார் மற்றும் பிரான்மலை ஊராட்சி செயலர் மதியழகு, மேலப்பட்டி ஊராட்சி செயலர் பழனியப்பன், தலைமை எழுத்தர் அங்கமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளில் உள்ள கண்மாய்கள் ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலை குடிமராத்து பணிகள் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவில் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி ஆணையாளர் அழகுமீனாள் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல பொறியாளர் ரவி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, தமயந்தி மற்றும் ஒன்றிய மேற்பார்வையாளர் ராஜ்குமார், கருப்புச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்லல் ஊராட்சிக்குட்பட்ட திருத்திப்பட்டி பகுதியில் குடிமராமத்து பணிகளை நடராஜபுரம் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் சேவியர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் செல்வி, ஆணையாளர்கள் ஜெயராமன், பிரதீப், உதவி பொறியாளர் சதீஷ், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் முத்துராமன் செய்திருந்தார்.

இதேபோல் தேவகோட்டையை அடுத்த கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளில் குடிமராமத்து பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் சித்தனூர், கள்ளிவயல் மற்றும் தத்தனி ஆகிய ஊராட்சிகளில் கலெக்டரின் நேர்முக உதவியாளரும், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய மண்டல அலுவலருமான் லோகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், அன்புச்செல்வி, உதவி பொறியாளர் ஜோசப் மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்