ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆர்.டி.ஓ. ஆய்வு

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் ஆர்.டி.ஓ. முருகேசன் ஆய்வு நடத்தினார்.

Update: 2019-08-10 22:30 GMT
ஈரோடு,

கர்நாடகாவில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பவானிசாகர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. எனவே அணையில் இருந்து ஆற்றில் உபரிநீர் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதனால் ஈரோடு மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி அதிகாரிகளும் பவானி, காவிரி ஆற்றங்கரையோரம் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன் ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியில் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது காவிரிக்கரையோரமாக எத்தனை பேர் வசித்து வருகிறார்கள்? தண்ணீர் அதிகமாக வந்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. முருகேசன் கூறியதாவது:-

பவானியில் இருந்து கொடுமுடி வரை காவிரி கரையோரமாக உள்ள மக்களுக்கு தண்டோரா மூலமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கையை எடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், மீட்பு நடவடிக்கைக்கு தேவையான பொக்லைன் எந்திரங்கள், வாகனங்கள், பொதுமக்களை தங்க வைக்க திருமண மண்டபங்கள் ஆகியன தயார் நிலையில் உள்ளன. வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.

காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் அளவை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அபாய கட்டத்தை எட்டும்போது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது ஈரோடு தாசில்தார் ரவிசந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்