ரூ.4½ லட்சத்தை வழிப்பறி செய்ததாக நாடகம், நிதிநிறுவன ஊழியரின் கள்ளக்காதலியும் கைது - விசாரணையில் பரபரப்பு தகவல்
ரூ.4½ லட்சத்தை வழிப்பறி செய்ததாக நாடகமாடிய நிதிநிறுவன ஊழியரின் கள்ளக்காதலியையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
வையம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 31). இவர் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அந்த நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூல் செய்து வருவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் இவர் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, தங்கள் நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூல் செய்தார். இவ்வாறு வசூல் செய்த ரூ.2 லட்சத்தை எடுத்துக்கொண்டு, பாலசுப்பிரமணியன் நேற்று முன்தினம் இரவு துவரங்குறிச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த போது, முகத்தில் மூக்குப்பொடியை தூவி பணத்தை மர்மஆசாமிகள் பறித்துச்சென்று விட்டதாக நிதிநிறுவன மேலாளருக்கு தகவல் கொடுத்தார்.
நிதிநிறுவன மேலாளர் அருண்ராஜ் இதுபற்றி துவரங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் துவரங்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுஷா மனோகரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது, பாலசுப்பிரமணியன் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார்.
போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை செய்ததில், அவர் வசூல் செய்தது ரூ.4½ லட்சம் என்றும், அதை மோசடி செய்வதற்காக தனது மனைவி புஷ்பவள்ளி(35) என்பவருடன் சேர்ந்து வழிப்பறி நாடகம் ஆடியதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். பணத்துடன் தலைமறைவான புஷ்பவள்ளியை தேடிவந்தனர்.
இந்தநிலையில் பணத்துடன் சிக்கிய புஷ்பவள்ளியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல் தெரியவந்தது. உண்மையில் பாலசுப்பிரமணியனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. புஷ்பவள்ளிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 14 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில், பாலசுப்பிரமணியனுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதனால் இருவரும் சொந்தமாக வீடுகட்டி உல்லாசமாக வாழ ஆசைப்பட்டுள்ளனர். இதற்காக புஷ்பவள்ளியை வரவழைத்து தனது முகத்தில் மூக்குப்பொடியை தூவி, ரூ.4½ லட்சத்தை பறித்துச்செல்லும்படி கூறியுள்ளார். அதன்படி அவரும் பணத்தை பறித்து சென்றுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து பாலசுப்பிரமணியனின் கள்ளக்காதலி புஷ்பவள்ளியையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.4½ லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரின் இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.