மேற்கு மராட்டியத்தில் கன மழையால் வெள்ளப்பாதிப்பு மீட்பு பணியில் கடற்படை தீவிரம் படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

மேற்கு மராட்டியத்தில் கன மழையால் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்களில் மீட்பு பணியில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. படகு கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரித்து உள்ளது.

Update: 2019-08-10 00:00 GMT
புனே,

மராட்டியத்தின் மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா ஆகிய 5 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக கோலாப்பூர் மற்றும் சாங்கிலி மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

அங்கு வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

சாங்கிலி, கோலாப்பூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை தீவிரமாக இறங்கியுள்ளது. 12 படைப்பிரிவுகளை கொண்ட கடற்படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

கோலாப்பூரில் 97 ஆயிரத்து 102 பேரும், சாங்கிலியில் 80 ஆயிரத்து 319 பேரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்குள்ள மக்கள் தங்களது கட்டிடங்களின் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்து உள்ளார்கள். அவர்கள் உணவு மற்றும் தண்ணீர் இன்றி தவித்து வந்தனர்.

இந்தநிலையில், நேற்று அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

சாங்கிலி மாவட்டத்தில் உள்ள பிராமனால் கிராமத்தில் நேற்று முன்தினம் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை மீட்பு படையினர் படகில் மீட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த படகு கவிழ்ந்தது. இதில் அதிலிருந்த 9 பேர் பலியானார்கள். 4 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்கள். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

இந்தநிலையில், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வர்களில் 2 பேர் நேற்று பிணமாக மீட்கப்பட்டனர். இதன் காரணமாக இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்