விருத்தாசலம் அருகே, தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல் - தொழிலாளி பலி

விருத்தாசலம் அருகே தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-08-09 22:45 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள கோ.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் வெங்கடேஸ்வரன் (வயது 32), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ்(22) என்பவருடன் சொந்த வேலை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

புறவழிச்சாலையில் சென்ற போது, எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த வெங்கடேஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆனந்தராஜ் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான வெங்கடேஸ்வரன் உடலை பார்வையிட்டு, விபத்து குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்