பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட - எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது

கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-08-09 22:45 GMT
கோவை,

கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர்அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்றுமாலை நடந்தது. இதற்கு எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் கே.ராஜா உசேன் தலைமை தாங்கினார். இதில், மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக், மாநில பொருளாளர் அபுதாகிர், மாநில இ்ணை செயலாளர் மீன் கரீம், தந்தை பெரியார் திராவிடர்கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் சுசி கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் பேசியதாவது:-

என்.ஐ.ஏ., மற்றும் யு.ஏ.பி.ஏ. சட்டங்களில் மாநில சுயாட்சியை பறிக்கும் வகையில் திருத்தங்களையும், அரசின் வெளிப்படைத்தன்மையை கேள்விப்படுத்தும் ஆர்.டி.ஐ. சட்டத்தில் திருத்தமும் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட 370 மற்றும் 35 ஏ ஆகிய சிறப்பு சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாரதீய ஜனதா அரசை கண்டித்து நாடு முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முற்றுகை போராட்டத்தில் கோவை மண்டல செயலாளர் முஸ்தபா, மாவட்ட பொதுச்செயலாளர் இஷாக் மற்றும் செய்தி தொடர்பாளர் மன்சூர் அலி உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதே போல காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கோவை ரெயில் நிலையம் முற்றுகையிடப்பட்டது. இதற்கு மாவட்ட செயலாளர் மீன்கடை அப்பாஸ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் முற்றுகையில் ஈடுபட்ட 140 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

மேலும் செய்திகள்