மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசு உறுதி முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி

மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசு உறுதியளித்து உள்ளதாக எடியூரப்பா கூறினார்.

Update: 2019-08-09 22:16 GMT
பாகல்கோட்டை,

முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பாகல்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். மேலும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் அவர், மீட்பு, நிவாரண பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாகல்கோட்டையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளை ஆய்வு செய்தேன். ஹெலிகாப்டரில் சுற்றி பார்வையிட்டேன். வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசுடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். மழை பாதிப்புகள், மீட்பு, நிவாரண பணிகள் குறித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரிடம் விளக்கி கூறியுள்ளேன். நிதி உள்பட அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

நேற்று முன்தின தகவல்படி வெள்ளத்தில் சிக்கிய 44 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர். 9 பேர் மரணம் அடைந்தனர். பெலகாவி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு மட்டும் 6 பேர் பலியாகியுள்ளனர். 40 ஆயிரத்து 180 பேர் மீட்பு குழுக்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். மந்திரிகள் இல்லாததால் நான் தனிமையால் இருந்து பணியாற்றுவதாக கண்டிப்பாக உணரவில்லை. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

எடியூரப்பா இன்று (சனிக்கிழமை) தார்வார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

மேலும் செய்திகள்