ரூ.10 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட சேலம் ராமகிருஷ்ணா பூங்கா திறப்பு
சேலத்தில் ரூ.10 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட ராமகிருஷ்ணா பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் திறந்து வைத்தார்.
சேலம்,
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.8 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் 17 பசுமைவெளி பூங்காக்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழைய பூங்காக்களை அனைத்து வசதிகளுடன் புனரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அஸ்தம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட ராமகிருஷ்ணா சாலையில், 1945-ஆம் ஆண்டு 15 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா பூங்காவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பெரிய நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு நிதி உதவியின் கீழ் ராமகிருஷ்ணா மடம் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட ராமகிருஷ்ணா பூங்கா திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு பூங்காவை மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி உபகரணங்களில் ஏறி சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தார்.
பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள பூங்காவாக மேம்படுத்தப்பட்டு, குழந்தைகளை கவரும் வண்ணம் விளையாட்டு உபகரணங்கள், பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைமேடை, திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்களை புனரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு குடியிருப்பு நல சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்வர வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் சுவாமி யாதக்மானந்தா, உதவி ஆணையாளர்கள் சுந்தரராஜன், பாஸ்கரன், ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.