வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட தினம்: காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தியாகிகள் கவுரவிப்பு

வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்ட தினத்தையொட்டி புதுவையில் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

Update: 2019-08-09 23:30 GMT
புதுச்சேரி,

இந்திய சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம் முக்கியமானதாகும். இந்த போராட்ட நாள் தியாகிகள் தினமாக காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தியாகிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு தியாகிகளை கவுரவித்தனர். நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் 2 சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஒன்று ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வெற்றிபெற்றது. மற்றொன்று பிரெஞ்சு ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடி புதுச்சேரி வெற்றிபெற்ற தினம்.

இந்தியா 1947-ம் ஆண்டே இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. ஆனால் புதுச்சேரி 1954-ல்தான் சுதந்திரம் பெற்றது. இந்தியாவின் பிரதமராக இருந்த நேருவின் நடவடிக்கை மூலம் புதுச்சேரிக்கு சுதந்திரம் கிடைத்தது.

புதுச்சேரி சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை கவுரவிக்க முடிவு செய்யப்பட்டு அவர்கள் வெள்ளையனே வெளியேறு இயக்க தினத்தில் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினனர்.

காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் பேசும்போது, இந்தியாவில் காங்கிரஸ் சார்பில் பிரதமர்களாக இருந்தவர்கள் நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் காங்கிரஸ் அல்லாத பிரதமர்கள் வன்முறை மற்றும் பாகுபாடுகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.

விழாவில் அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன், புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் துணைத்தலைவர் வினாயகமூர்த்தி, பொதுச் செயலாளர் ஏ.கே.டி.ஆறு முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் ராஜா தியேட்டர் சந்திப்புக்கு வந்தார்கள். தியாகிகள் தினத்தையொட்டி காங்கிரஸ் சேவாதளம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலத்தை தொடங்கிவைத்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் மற்றும் அமைச்சர்கள் கட்சி கொடியேந்தி நேரு வீதியில் சிறிது தூரம் நடந்து சென்றார்கள். இந்த ஊர்வலம் புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு முடிவடைந்தது.

மேலும் செய்திகள்