விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் தமிழக அரசு பஸ்கள் ஜப்தி - புதுவை கோர்ட்டு நடவடிக்கை

விபத்தில் நஷ்டஈடு வழங்காததால் தமிழக அரசு பஸ்கள் புதுவை கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2019-08-09 22:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சந்துரு (வயது 16). இதே பகுதியை சேர்ந்த காதர் என்பவரது மகன் சிக்கந்தர் (18). இவர்கள் 2 பேரும் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி இந்திராகாந்தி சிலையில் இருந்து கோரிமேடு சென்றனர். எல்லைப்பிள்ளைச் சாவடியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை அருகே சென்ற போது புதுவையில் இருந்து சென்னை சென்ற தமிழக அரசு பஸ் மோதியதில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது தொடர்பாக புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுவை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நீதிபதி சுபா முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் விசாரணை முடிந்து 8.8.2018 அன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் அந்த இழப்பீட்டு தொகையை தமிழக அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை.

இதனை தொடர்ந்து விபத்தில் பலியான சந்துருவின் தாயார் சுமதி, சிக்கந்தரின் தாயார் சம்சுனிசா பேகம் ஆகியோர் புதுவை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நேற்று காலை நீதிபதி சுபா விசாரித்து, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்காத தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் 2 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை புதுவை பஸ் நிலையத்தில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 2 பஸ்களை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ்கள் கோர்ட்டுக்கு வளாகத்திற்கு கொண்டு வந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் தரப்பில் வக்கீல் ரவி ஆஜரானார்.

மேலும் செய்திகள்