அரியலூர் அருகே வயலுக்கு தண்ணீர் தர மறுத்த தம்பி வெட்டிக்கொலை-அண்ணன் உள்பட 2 பேர் கைது

அரியலூர் அருகே வயலுக்கு பாய்ச்ச தண்ணீர் தர மறுத்த தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-09 23:00 GMT
அரியலூர்,

அரியலூர் அருகே உள்ள பார்பனச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மகன்கள் கோவிந்தராசு(வயது 50), ராமலிங்கம்(44). ராமலிங்கம் அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் கோவிந்தராசு தனது தம்பி ராமலிங்கத்திடம் ஆழ்குழாய் கிணறு வெட்ட தானும் பணம் கொடுத்துள்ளதால், எனது வயலுக்கும் தண்ணீர் தர வேண்டும் என்று அடிக்கடி கேட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வயலில் ராமலிங்கம் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு கோவிந்தராசு, தனது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் வெங்கடேசனுடன்(31) வந்து ராமலிங்கத்திடம் தனது வயலுக்கு பாய்ச்சுவதற்காக தண்ணீர் கேட்டார். இதுதொடர்பாக அண்ணன்-தம்பிக்கு இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தராசு மற்றும் வெங்கடேசன் ஆகியோர் அரிவாளால் ராமலிங்கத்தை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த ராமலிங்கம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக ராமலிங்கத்தின் தாய் அழகம்மாள் கொடுத்த புகாரின்பேரில், அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த கோவிந்தராசு மற்றும் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்