அரியலூர் மாவட்டத்தில் 2 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வருவாய் அதிகாரி தகவல்

அரியலூர் மாவட்டத்தில் 2¼ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி தெரிவித்தார்.

Update: 2019-08-09 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் குழந்தைகளுக்கான குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் அனைத்து அரசு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெற்று வருகிறது.

அதன்படி, அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகளுக்கான தேசிய குடற்புழு நீக்க முகாமினை மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி தொடங்கி வைத்து, 150 மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரை அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 373 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது என்றார்.

அப்போது துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) டாக்டர் ஹேமசந்த்காந்தி, வட்டார மருத்துவ அலுவலர் உமாமகேஸ்வரி, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நிரஞ்சனா, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் விருத்தகிரி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்முருகன், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பரிமளம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமினை அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் குழந்தைவேல், உமாபதி, கிராம சுகாதார செவிலியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் மொத்தம் 651 மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்