ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆதரவின்ற தவித்த மூதாட்டிகள் உள்பட 4 பேர் மீட்பு; முதியவருக்கு முடிதிருத்தம் செய்த இளைஞர்-இளம்பெண்கள்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஆதரவின்றி தவித்த மூதாட்டிகள் உள்பட 4 பேர் மீட்கப்பட்டனர். முதியவருக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் முடிதிருத்தம் செய்தனர்.;

Update: 2019-08-09 22:45 GMT
ஈரோடு,

ஈரோடு மாநகர் பகுதிக்கு உள்பட்ட பஸ் நிலையம், ரெயில் நிலையம், வ.உ.சி. பூங்கா ஆகிய இடங்களில் ஆதரவின்றி பலர் சுற்றி திரிகின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து பிச்சை எடுத்து தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். மேலும், தங்க இடமின்றி மழையிலும், வெயிலிலும் தவித்து வருகின்றனர். இவர்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தாலும், அவர்கள் எங்கு செல்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனால் சிலர் அரசு ஆஸ்பத்திரியிலேயே உள்நோயாளியாக பல மாதங்களாக சிகிச்சை பெறுகிறார்கள்.

இவர்களை பார்த்த சமூக ஆர்வலர்கள், ஆதரவற்ற முதியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வரும் அட்சயம் அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்களிடம் தெரிவித்தனர். அவர்களும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஆதரவின்றி தவிக்கும் முதியவர்கள், மூதாட்டிகளின் விவரங்களை சேகரித்தனர். அப்போது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வயதானவர்கள் எங்கு செல்வதென்று தெரியாமல் இருந்த வந்ததை கவனித்தனர். அவர்களுக்கு உதவுவதற்கான முயற்சியில் இளைஞர்கள் இறங்கினார்கள்.

அதன்படி மணிஷா, மணிமேகலை, ரமேஷ், பாலாஜி, பிரவீன், புவனேஸ்குமார் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அங்கு புறநோயாளிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கும் இடத்துக்கு அருகில் முதியவர் ஒருவர் அழுக்கான ஆடைகளை அணிந்தபடி தூங்கி கொண்டிருந்தார். அவரிடம் இளைஞர்கள் விசாரித்தபோது, தனது பெயர் பரமசிவம், 93 வயதாகிறது என்றும், தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் கூறினார். தன்னை கவனிக்க யாரும் இல்லாததால் ஆதரவின்றி இருப்பதாகவும் தெரிவித்தார். அவரை காப்பகத்தில் சேர்க்க உதவி செய்வதாக இளைஞர்கள் கேட்டதற்கு ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து பரமசிவத்துக்கு இளைஞர்களும், இளம்பெண்களும் சேர்ந்து முடிதிருத்தம் செய்து, குளிப்பாட்டிவிட்டு புத்தாடைகளை அணிவித்தனர்.

இதேபோல் அரசு ஆஸ்பத்திரியில் சுமார் ஒரு ஆண்டாக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெபஸ்டியம்மாள் (70), திருச்சியை சேர்ந்த கண்ணம்மாள் (60) ஆகிய 2 மூதாட்டிகளையும், திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரை சேர்ந்த முருகன் (55) என்பவரையும் இளைஞர்கள் மீட்டனர். அவர்கள் 3 பேருமே ஈரோடு மாநகர் பகுதியில் பிச்சைக்காரர்களாக இருந்து உடல்நலக்குறைவால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள்.

மீட்கப்பட்ட 4 பேரையும் புதுக்கோட்டை அறந்தாங்கி ரோடு அழியாநிலை பகுதியில் உள்ள நமது இல்லம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்க அழைத்து செல்லப்பட்டனர். முதியவர்களுக்கு உணவு, புத்தாடைகளை வாங்கி கொடுத்து பரிவுடன் மீட்ட இளைஞர்களையும், இளம்பெண்களையும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்