107 வயதான ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டருடன் டி.ஜி.பி. சந்திப்பு

107 வயதான ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரை, டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2019-08-08 23:46 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆரோக்கியசாமி (வயது 107). பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே புதுவை காவல்துறையில் சேர்ந்து பணியாற்றியவர். கடந்த 1965ம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது நெல்லித்தோப்பில் உள்ள அருள்படையாச்சி வீதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் புதுவை மாநிலத்திற்கு புதிய டி.ஜி.பி.யாக பொறுப்பேற்றுள்ள பாலாஜி ஸ்ரீ வஸ்தவா நேற்று காலை நெல்லித்தோப்பில் உள்ள ஆரோக்கியசாமி வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். பின்னர் அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அப்போது ஆரோக்கியசாமி அவரிடம், புதுச்சேரி காவல்துறையில் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், ஓய்வூதியம் பெறும் காவலர்களுக்கு இன்னும் 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் கூட அமல்படுத்தவில்லை, அதனை அமல்படுத்த உதவும்படி கோரிக்கை விடுத்தார்.

இதனை கேட்டுக்கொண்ட போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீ வஸ்தவா, அவரிடம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின் போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்