காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: அரவிந்தர் ஆசிரமத்தில் ஆன்மிக கொடியேற்றம்

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து: மகான் அரவிந்தர் தனி ஆன்மிக கொடியை உருவாக்கினார். அந்த கொடியானது இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அரவிந்தர் ஆசிரமத்தில் ஏற்றப்பட்டது.

Update: 2019-08-08 23:33 GMT
புதுச்சேரி,

மகான் அரவிந்தர் தனி ஆன்மிக கொடியை உருவாக்கினார். அந்த கொடியானது இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அரவிந்தர் ஆசிரமத்தில் ஏற்றப்பட்டது. அதன் பிறகு புதுவை மாநிலம் பிரெஞ்சு ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்த நவம்பர் 1-ந்தேதி ஏற்றப்பட்டது.

அதன்பின் ஆண்டுக்கு 4 முறை செயின்ட் மார்ட்டின் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரம நூலக கட்டிடத்தில் ஏற்றப்பட்டு வருகிறது. அரவிந்தர் பிறந்த தினமான ஆகஸ்டு 15-ந் தேதி, அன்னை மீரா பிறந்த தினமான பிப்ரவரி 21-ந் தேதி, அன்னை புதுவைக்கு வருகை தந்த தினமான ஏப்ரல் 24, அரவிந்தர் சித்தியடைந்த தினமான நவம்பர் 24 ஆகிய தினங்களில் இந்த ஆன்மிக கொடி ஆசிரம நூலக கட்டிடத்தில் ஏற்றப்படுவது வழக்கம்.

அதேபோல் பிற பகுதிகள் இந்தியாவோடு இணையும்போதும் ஆன்மிக கொடியை ஏற்ற வேண்டும் என்று அன்னை மீரா கட்டளையிட்டிருந்தார். அதன்படி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இந்தியாவுடன் இணைந்த நாளாக கருதப்பட்டு அன்னையின் கட்டளைப்படி ஆசிரம நூலக கட்டிடத்தில் ஆன்மிக கொடி ஏற்றப்பட்டது.

மேலும் செய்திகள்