உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட சேடபட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நேற்று உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை ரூ.3,000ஆக உயர்த்த வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி அவர்களின் கேரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஊருக்கு அருகிலேயே வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் போராட்டம் குறித்து தகவல் அறிந்து வந்த கோட்டாட்சியர் பானுகோபாலன் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க மாதாந்திர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.